இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கியது தொடர்பான கேள்விக்கு பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து பதில் அளிக்க மறுத்துள்ளார்
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கவிஞர் வைரமுத்து, ''கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்க வேண்டும் என்று பல இயக்குநர்கள் என்னிடம் கேட்டார்கள். தொலைக்காட்சி தொடராக இயக்கலாமா என்று பாரதிராஜா என்னை கேட்டார். எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. ஏனென்றால் ஒரு நாவல் படமாக்கப்படுகின்றபோது இரண்டு விதமான விளைவுகள் ஏற்படும். ஒன்று அந்த நாவல் இருப்பதைவிட சிறப்பாக எடுத்துக்காட்டுவது. அல்லது நாவலில் இருப்பதை விட அது குறைவாக மாறிவிடுவது.
உதாரணமாக 'பார்த்திபன் கனவு' என்ற கல்கியின் நாவல் நாவலாக இருந்ததை விட படமாக வந்த பொழுது அந்தப் படைப்பின் உயரம் சற்று குறைந்து போனது. ஆனால் 'ஏழை படும்பாடு' என்று தமிழில் வந்த நாவல் படமாக்கப்பட்ட போது மாபெரும் வெற்றி பெற்றது. தில்லானா மோகனாம்பாள் வெற்றி பெற்றது. தில்லானா மோகனாம்பாள், ஏழை படும்பாடு என்ற உயரத்தில் கள்ளிக்காட்டு இதிகாசமும் படைக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். காலம் கனிய வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார்.
அப்பொழுது இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு 'நான் இந்த கேள்விக்கு தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறேன்' என கூறி கேள்விக்கு பதில் சொல்ல மறுத்தார்.