விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் விழுப்புரத்தில் நேற்று காலை 6:15 மணிக்கு கிளம்பியது. சேர்ந்தனூர்க்கும் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே திருத்துறையூருக்கும் இடையே சென்றபோது தண்டவாளத்தில் லேசான அதிர்வு ஏற்பட்டது. இதை உணர்ந்த ரயில் என்ஜின் டிரைவர் உடனடியாக அப்பாதையில் சீரான வேகத்தில் ரயிலை இயக்கினார். பின்னர் திருத்துறையூர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனிடையே கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரது மனைவி, ரயில்வே ஒப்பந்த தொழிலாளியான மஞ்சு (வயது 22) என்பவர் நேற்று காலை இயற்கை உபாதைக்குச் சென்றபோது அக்கடவல்லி கிராமம் வழியாக செல்லும் விழுப்புரம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை பார்த்தார். அவரும் உடனடியாக ரயில்வே துறையினருக்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில் 7.15 மணிக்கு அக்கடவல்லியைக் கடந்து செல்லும் திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் ரயில் திருத்துறையூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் விபத்தும், பெரும் சேதமும் தவிர்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு போலீசார் அக்கடவல்லி கிராமத்திற்கு விரைந்து சென்று, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து விசாரணை நடத்தினர். அதேசமயம் திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்வழியாக வந்து கொண்டிருந்தது. உடனே ரயில்வே அதிகாரிகள் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் திருத்துறையூருக்கும் பண்ருட்டிக்கும் இடையே 7.10.மணிக்கு அந்த ரயில் நிறுத்தப்பட்டது.
ரயில்வே அதிகாரிகள் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்தனர். தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரி செய்யும் பணி நடந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அப்பணி முடிவடைந்தது. விரிசல் ஏற்பட்டிருந்த தண்டவாளப் பகுதியில் தற்காலிகமாக வெல்டிங் வைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் சரி செய்யும் பணி நடைபெற்றது. அதன் பிறகு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு காலை 8 மணிக்கு அக்கடவல்லி கிராமத்தை கடந்து சென்றது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விழுப்புரம் ரயில் நிலையத்தில் காலை 7:30 மணிக்கு வர வேண்டிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக 8.30 மணிக்கு வந்தடைந்தது.
தொடர்ந்து சென்னையிலிருந்து திருச்சி செல்லும் ரயில், விழுப்புரத்திலிருந்து மாயவரம் செல்லும் ரயில் ஆகியவையும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. பின்னர் விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தின் பாகம் அகற்றப்பட்டு புதிய தண்டவாளம் பொருத்தி இணைக்கும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் மதியம் 2.30 மணிக்கு நிறைவடைந்தது. இதன்பிறகு அந்த வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை கவனித்து அதை உடனடியாக ரயில்வே துறைக்கு தகவல் அளித்த ஒப்பந்த தொழிலாளி மஞ்சுவை ரயில்வே அதிகாரிகளும் காவல்துறையினரும் பாராட்டினர்.