கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சபாபதி என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் அவரது மகன்கள் நான்கு பேர் நேற்று இரவு கோடியக்கரை அருகே கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இரண்டு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் மீனவர்களின் படகுகளில் ஏறிய இலங்கை கடல் கொள்ளையர்கள் அவர்களது கழுத்தில் கத்தியை வைத்து இரும்பு ராடால் தாக்க தொடங்கியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த நாகை மீனவர்கள் அவர்களின் தாக்குதலை தடுத்துள்ளனர். ஆத்திரமடைந்த கடற்கொள்ளையர்கள் நான்கு மீனவர்களையும் சரமாரியாக தாக்கியதோடு படகுகளில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ வலையை 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் ஜிபிஎஸ் செல்போன் உள்ளிட்ட கருவிகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்றும் நாகையில் இருந்து கோடியக்கரை அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது இரண்டு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களை திருடிச் சென்றது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.