நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அருகே உள்ள ஈச்சவாரியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் ராஜா. விவசாயி. இவர், தனது தோட்டத்தில் மூங்கில் பயிரிட்டிருந்தார். மரங்கள் வெட்டுக்குத் தயாரானதை அடுத்து, அவற்றை வெட்டி விற்பனை செய்வதற்காக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு அனுமதி கேட்டு, வனவர் தேவராஜன் (45), வனக்காவலர் காசிமணி ஆகியோரிடம் விண்ணப்பித்து இருந்தார்.
மூங்கில் மர பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு அனுமதி அளிக்க வனத்துறை அலுவலர்கள் இருவரும் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 4 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என ஒப்புக்கொண்டனர். ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையில் புகாரளித்தார். காவல்துறை வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி கடந்த 2005ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி, விவசாயி ராஜா, வனத்துறை அலுவலர்கள் வரதராஜன், காசிமணி ஆகியோரைச் சந்தித்து 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார்.
அந்தப் பணத்தை வனத்துறை அலுவலர்கள் வாங்கியுள்ளனர். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர், வனத்துறை அலுவலர்கள் இருவரையும் கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 19 ஆண்டாக நடந்து வந்த வழக்கில், இருதரப்பு விசாரணையும் முடிந்தது.
இதையடுத்து ஜன. 30ம் தேதி நீதிபதி சாந்தி தீர்ப்பு அளித்தார். லஞ்சம் வாங்கிய வனவர் வரதராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அதேநேரம் வழக்கில் இருந்து காசிமணி விடுவிக்கப்பட்டார். வரதராஜனுக்கு தற்போது 64 வயதாகிறது. துறையில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.