தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், செட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி, தலைமை தாங்கினார். ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், திட்ட இயக்குநர் சரவணன், செட்டியபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, “தமிழக மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் அறிவித்து, அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவதோடு, தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். குழந்தைகள் நலனிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி கற்கவும் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது காலை உணவு சாப்பிடாமல் வருகின்றனர் என்பதை அறிந்து, அவர்களின் வயிற்றுப் பசியை நீக்க இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், சத்துணவுத் திட்டத்தில் வாரத்தில் 5 முட்டைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். தற்போது, இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் செயல்படுத்தும் பணியை இன்று திருக்குவளையில் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 17 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக, திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு, முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி, ஊராட்சிப் பகுதிகளில் 34 பள்ளிகளைச் சேர்ந்த 951 மாணவ, மாணவிகளுக்கும், நகர்ப்புறங்களில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 1,354 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 49 பள்ளிகளைச் சேர்ந்த 2,305 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.
அது போல் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,034 பள்ளிகளைச் சேர்ந்த 53,715 மாணவ, மாணவிகளுக்கும், நகர்ப்புறத்தில் 28 பள்ளிகளைச் சேர்ந்த 2,310 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 1,062 பள்ளிகளைச் சேர்ந்த 56,025 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 1,068 பள்ளிகளில் பயிலும் 54,666 மாணவ, மாணவிகள், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 43 பள்ளிகளில் பயிலும் 3,664 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,111 பள்ளிகளில் பயிலும் 58,330 மாணவ, மாணவிகள் பயனடைகின்றனர்.
இத்திட்டத்தின்படி, பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமைகளில் ரவா காய்கறி கிச்சடி, புதன்கிழமைகளில் அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், வியாழக்கிழமைகளில் வரகு பொங்கலுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமைகளில் சாமை கிச்சடி மற்றும் ரவா கேசரி ஆகியவை சமைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. சமையல் மையப் பொறுப்பாளர்களுக்கு அந்தந்த வட்டாரங்களில் தனித்தனி குழுவாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதில் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், ஆத்தூர் நடராஜன் அம்பை ரவி உட்பட கட்சிப் பொறுப்பாளர்களும், அதிகாரிகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.