மாநில உரிமைகளை தமிழக அரசு மத்திய அரசிடம் விட்டு கொடுப்பதை தமிழக மக்கள் விரும்பவில்லை எனவும், மத்திய அரசிற்கு எதிராக துணிச்சலான முடிவுகளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல தமிழக அரசு எடுக்க வேண்டுமெனவும் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசியபோது,டிடிவி தினகரன் வீட்டின் முன் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வவியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், 80 ஆண்டுகளாக பொதுவாழ்வில் உள்ளவரும், தமிழ் உலகின் சிறந்த அரசியல் தலைவருமான திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் மீண்டு வர வேண்டுமென கட்சி சார்பற்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கலைஞர் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறோம்.
அதிமுக உடன் மரியாதை நிமித்தமான உடன்பாடு உள்ளது. தேர்தல் கூட்டணி தேர்தலோடு முடிந்து விட்டது. தமிழக அரசை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. அரசின் செயல்பாடுகளை பொறுத்து பாராட்டியும், விமர்சனத்தையும் செய்து வருகிறோம்.
பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதில் மத்திய அரசு ஆளுநரின் மூலமாக மறைமுகமாக தலையீடு இருக்கிறது. மாநில உரிமைகளை மத்திய அரசிடம் விட்டு கொடுப்பதை நாங்களும், தமிழக மக்களும் விரும்பவில்லை. மத்திய அரசிற்கு எதிராக துணிச்சலான முடிவுகளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல தமிழக அரசு எடுக்க வேண்டும்.
துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சகோதரருக்கு மருத்துவ சிகிச்சைக்கு இராணுவ ஹெலிகாப்டர் கொடுத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உதவியது போல, சாதரண மக்களுக்கும் உதவ வேண்டும். டெல்லியில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தது மத்திய அரசின் ஆணவத்தை காட்டுகிறது. இவ்வாறு கூறினார்.