நாமக்கல் அருகே, 15 வயது சிறுமியை கடத்திச்சென்று திருட்டுத்தனமாக கல்யாணம் செய்து குடும்பம் நடத்திய 16 வயது சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி மாயமாகி விட்டதாக அவருடைய தந்தை, மோகனூர் காவல்நிலையத்தில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு புகார் அளித்தார். காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். முதல்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், அந்தச் சிறுமியை கடத்திச்சென்றது தெரிய வந்தது. சிறுவனின் அலைபேசி எண்ணை வைத்து விசாரித்ததில், சிறுமியும் சிறுவனும் சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் சென்னை சென்று, அவர்களை மீட்டு மோகனூர் காவல்நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் சிறுவனும், சிறுமியும் காதலித்து வந்ததும், இதையறிந்த சிறுவனின் தந்தை அவர்களிடம் பணத்தைக் கொடுத்து, எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி வழியனுப்பி வைத்திருப்பதும் தெரிய வந்தது. சென்னையில் ஒரு கோயிலில் வைத்து அவர்கள் இருவரும் திருட்டுத்தனமாக கல்யாணம் செய்து கொண்டு, குடும்பம் நடத்தியுள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கு நாமக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சிறுமியை கடத்திச் சென்றதாக சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவனை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். பதின்பருவத்தில் எதிர் பாலினத்தவர் மீது ஏற்படும் ஈர்ப்பு, காதல் ஆகாது என்று அறிவுரை சொல்ல வேண்டிய சிறுவனின் தந்தையே, மகனையும், சிறுமியையும் ஓடிப்போய் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி வழியனுப்பி வைத்த வினோத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.