அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சை சிறுவன் ஒருவன் ஓட்டிய போது விபத்து நிகழ்ந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி மேலும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மாவட்டம் முழுவதிலுமிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் மருத்துவ அவசர சேவைக்காக அரசு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தின் வெளிப்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ஆம்புலன்ஸ் திடீரென வேகமாக கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அந்த ஆம்புலன்ஸை இயக்கியது சிறுவன் என்பது தெரிய வந்தது. நோயாளியை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் நோயாளியை உள்ளே அழைத்துச் சென்ற நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த சிறுவன் ஆம்புலன்ஸை இயக்க முற்பட்டுள்ளான். தாறுமாறாக ஓடிய ஆம்புலன்ஸ் இரண்டு பெண்கள் மீது மோதியது. இருவரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.