![The boy trapped in the trap! Rescue Fire Department!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Udmu861VELrQbHHOpc5pZM1LjPO-VhIgWKKCYvnp4Ek/1654259077/sites/default/files/inline-images/th_2475.jpg)
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் - பாக்கியலட்சுமி தம்பதி. இவர்களின் மூன்று வயது மகன் யஸ்வந்த். குழந்தையான யஸ்வந்த், வீட்டில் தண்ணீர் பிடிக்க வைத்திருந்த தவலைக்குள் தன் இரு கால்களை உள்ளே நுழைத்து உட்கார்ந்து உள்ளான். உட்கார்ந்த சிறுவனால் தவலையில் இருந்து வெளியே வர முடியவில்லை. அதில் அந்த குழந்தை பயந்து அழ ஆரம்பித்துள்ளது.
மகனின் அழுகுரல் கேட்டு பெற்றோர்கள் இருவரும் ஓடிச்சென்று பார்த்தபோது, மகன் தவலைக்குள் சிக்கிக்கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை வெளியே எடுக்க பெரும் முயற்சி செய்தனர். அவர்களால் முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்க பெரும் முயற்சி செய்தும் முடியவில்லை. இதையடுத்து திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறுவன் மாட்டிக்கொண்ட தவலையை இரண்டாக வெட்டி சிறுவனை வெளியே மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.