திருவாரூர் அருகே ரூ.25000 பணத்திற்கு கொத்தடிமையாக மூன்று வருடங்களாக வேலைக்கு வைத்திருந்தது மட்டும் அல்லாமல் தொடர்ந்து வேலைக்கு வரவேண்டும் என அந்த குடும்பத்தினரை மிரட்டியதால், பாதுகாப்பு கேட்டும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டை பகுதியில் தோப்புத்தெருவில் ஜோதிபாசு என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக தனது மகனை அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரிடம் தனது மகன் வெங்கடேஷை வேலைக்கு அனுப்பியுள்ளார். ராஜசேகர் தன்னிடம் வேலை பார்ப்பதற்கு வாய்வழி ஒப்பந்தமாக மூன்று வருடங்களுக்கு ரூ.25000 பணத்தை வழங்கியுள்ளார்.
தற்போது மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தனது மகனை தொடர்ந்து வேலைக்கு வருமாறு துன்புறுத்தியதுடன், தற்கொலைக்கு முயலும் வகையில் வேலை நேரத்தில் அடித்து துன்புறுத்தி உள்ளார். தற்போது தான் தனது மகன் உடல்நிலை சீராகி மருத்துவனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.
இந்நிலையில் இரவு நேரங்களில் பணிக்கு வரவேண்டும், இல்லை என்றால் தனது பணத்தை திருப்பி தருமாறு தனது குடும்பத்தை மிரட்டி வருகிறார். இது குறித்து பரவக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் எனது மகனுக்கு, தனது குடும்பத்திற்கும் சரியான பாதுகாப்பு இல்லை எனக் கூறி இதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் ஜோதிபாபு குடும்பத்துடன் வந்து மனு அளித்தார்.