சாலைக்கு மண் எடுக்கிறோம் என்கிற பெயரில் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகள் ஒவ்வொன்றும் மரணக் குழிகளாக மாறி பச்சிளம் குழந்தைகளை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி ஆரப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கௌதம். 13 வயதான இந்த சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். சக நண்பர்களோடு சேர்ந்து கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள எஸ்.பி.எல் என்கிற நிறுவனத்திற்கு சொந்தமான மணல் குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் நீச்சல் அடித்துக் குளித்துள்ளனர். நிலைக்க முடியாத ஆழத்திலும் சேற்றிலும் சிக்கிய கெளதமை கூட வந்த சக நண்பர்கள் மீட்கப் போராடியுள்ளனர். ஆனாலும் அந்த சிறுவனை பிணமாகவே மீட்க முடிந்திருக்கிறது. இதனை கேள்விப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரும் ஊர்மக்களும் திரண்டு சென்று சடலமாக கிடந்த சிறுவனின் உடலை கண்டு கண்ணீர் விட்டுக் கதறி அழுது புரண்டனர்.
ஒட்டுமொத்த கிராம மக்களும் திரண்டு, “இனி ஒரு உயிர் கூட இந்த பகுதியில் போகக்கூடாது. ஏற்கனவே பல உயிர்கள் மணல் குவாரியால் போய்விட்டது. உடனே குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும். தோண்டப்பட்ட இடங்களுக்கு பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கம்போல் பூம்புகார் காவல்துறையினர் ஒருபுறம் மிரட்டல், மறுபுறம் அடக்குமுறை, இன்னொரு புறம் அமைதிப் பேச்சுவார்த்தை என மணல் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்ததோடு சிறுவனின் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுவனின் தந்தையும் தாயும் கதறி அழுத அவலம் அனைவரது மனதையும் உடைத்தது. “நேற்று தான் என் புள்ளைக்கு புது பேக், புது செருப்பு, புது வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்தோம். இன்னைக்கு ஸ்கூல் போக வேண்டிய புள்ள பிணமா சுடுகாட்டுக்கு போறானே. பாவிங்க, இனி ஒரு பிள்ளையும் காவு வாங்கிடாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்கனும்” என கண்ணீர் வடித்தனர்.
இது குறித்து சமூக ஆர்வலரும் கீழப்பெரும்பள்ளத்தை சேர்ந்தவருமான இளஞ்செழியன் கூறுகையில், “எங்க கிராமம் படிப்பறிவு இல்லாத பாமர மக்கள் அதிகம் வசிக்கிற கிராமம். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி என்பதால் மணல் மாபியாக்கள் எங்கள் பகுதியை குறிவைத்து தோண்டுகின்றனர். எங்கு திரும்பினாலும் கடல் போல் உருவாக்கி விட்டனர். ஒரு காலத்தில் மூன்று போகம் விளைந்த பூமி. தனியார் பவர் பிளாண்ட் நிறுவனத்தினர் அனைத்து நிலங்களையும் விலைக்கு வாங்கி தரிசு போட்டு இங்குள்ள அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடித்தனர். தரிசாகக் கிடந்த நிலங்களை திமுக பிரமுகர் ஒருவரது துணையோடு அனைத்து நிலங்களையும் விலைக்கு வாங்கிய மணல் மாஃபியாக்கள் விவசாய நிலங்கள் முழுவதையும் படுபாதாளத்திற்கு தோண்டி மண் எடுத்து விற்கின்றனர்.
50 மீட்டர் இடைவெளியில் குவாரிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பது விதி. 3 அடி ஆழத்திற்கு மேல் எடுக்கக் கூடாது என்பது விதி. இந்த விதிகள் அப்பாவி மக்களுக்கு மட்டும் தான் பொருந்தும் போல. இது போன்ற மணல் மாபியாக்களுக்கு கிடையாது என்பதற்கு எங்க கிராமமே சாட்சி. ஒரே கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்குது. அனைத்தும் மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவருக்கே சொந்தமானது. அத்தனையும் பலரது பெயரில் பினாமியாக நடத்தி வருவதாகச் சொல்லுறாங்க. ஒரு கிராமத்தையே அத்திப்பட்டி போல் அழிப்பது அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் போவது மர்மமாக இருக்கிறது. ஏற்கனவே ஒரு குழந்தை தண்ணீரில் விழுந்து இறந்துவிட்டது. இரண்டாவது சிறுவன். இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது என்பது எங்க கிராமத்தின் நிலைபாடு. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற குவாரிகளை இழுத்து மூட வேண்டும்” என்கிறார் ஆத்திரம் பொங்க.