என்ஜின் தான் ரயில் பெட்டியின் கடவுளே... ஐ லவ் யூ டா ட்ரெயின் செல்லக்குட்டி என்று வரி வரியாகக் கவிதை எழுதி வைத்துவிட்டு சிறுவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே வசித்து வருகின்றனர் ராமகிருஷ்ணன் - ஜெயா தம்பதியினர். இவர்களுக்கு இரு மகன்கள். மூத்த மகன் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வரும் நிலையில், 14 வயதாகும் பாலாஜி 9 ஆம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். ராமகிருஷ்ணன் விவசாய கூலியாகவும், ஜெயா ஏலக்காய் கடையில் தினக்கூலியாகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சிறுவன் பாலாஜிக்கு ரயில் பயணம் செய்ய அலாதி பிரியம். பகல் முழுவதும் போடிநாயக்கனூர் ரயில் நிலையத்திலேயே இருப்பாராம். மேலும் ரயில் பயணம் செய்யும் தனது வயதிருக்கும் சிறுவர்களைப் பார்த்து, தம்மால் ரயிலில் பயணம் செய்ய முடியவில்லை என்ற ஏக்கத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அடிக்கடி சிறுவன் தனது பெற்றோரிடம் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்று கூற, வேலைப் பளு காரணமாக மகனின் ஆசையை பெற்றோர்கள் நிறைவேற்றி வைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், ரயிலில் செல்லும் தனது ஆசை நிறைவேறாத ஏக்கத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாயின் புடவையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தியபோது தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சிறுவன் கைப்பட எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், “ட்ரெயின் சத்தம் ரொம்ப பிடிக்கும்; ட்ரெயினில் எந்த குறையும் கிடையாது. சுத்தமான நீர் எனப் பாதுகாப்பான வசதி உள்ளது. என்ஜின்தான் ட்ரெயினுக்கு கடவுளே; எனது ஆசை ட்ரெயினில் வேலை பார்ப்பதுதான்; நான் கடவுளிடம் கேட்பது ஒன்று மட்டுமே... நான் இறந்தாலும் ட்ரெயினிலேயே இறக்க வேண்டும்; அது என் கூடவே இருக்க வேண்டும். ட்ரெயின் ஒன்லி க்ரேட். ஐ லவ் யூ டா ட்ரெயின் செல்லக்குட்டி” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தக் கடிதத்தில் ட்ரெயின் எண்கள், எந்த ட்ரெயின் எங்கு எப்போது நிற்கும், ட்ரெயின் குறித்து வரிவரியாக எழுதி வைத்துள்ளார். ட்ரெயின் மீது தீராத அன்பு கொண்டிருந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டது தேனி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.