
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நார்த்தாமலை பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் சில நாட்களுக்கு முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், மற்றும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ளும் மத்திய மண்டல போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போது கொத்தமங்கலம் பட்டியை சேர்ந்த புகழேந்தி என்ற சிறுவன் தனது தாத்தா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவனது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மூளை வரை துளைத்து சென்றது.
ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு 4 மணி நேரம் போராடி மூளையிலிருந்த துப்பாக்கி குண்டு மற்றும் மண்டை ஓட்டின் துண்டுகளை மருத்துவ குழுவினர் அகற்றினார்கள். அதன் பிறகும் தொடர்ந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஆபத்தான நிலையிலேயே இருந்த சிறுவன் புகழேந்தி இன்று மாலை உயிரிழந்தார். இந்நிலையில், இந்த சம்பவத்தில் அவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரணம் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கு உரிய முறையில் விசாரணை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.