
நெல்லையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அதிகாலை நேரத்தில் தொழுகை முடித்துவிட்டு வரும்பொழுது வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் சிறார் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சமீபமாகவே நிகழும் கொலை வழக்குகளில், பாலியல் வழக்குகளில் சிறுவர்கள் கைது செய்யப்பட்டவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மிகவும் குறிப்பாக சமீபத்தில் காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியாக இருந்த வசூல்ராஜா என்ற நபர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நான்கு பேர் கல்லூரி மாணவர்கள் என்பதும், மூன்று பேர் சிறுவர்கள் என்ற பகீர் தகவல்கள் வெளியாகியது. இதேபோல் பல்வேறு கொலை சம்பவங்களில் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லையில் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் இது தொடர்பாக அண்மையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வெளியாகி இருக்கும் பதில்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 2020 ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை நெல்லைப் புறநகரில் 211 பேரும், நெல்லை மாநகரில் 74 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மிகவும் குறிப்பிட தகுந்த வகையில் கொலை சம்பவங்கள் தொடர்பாக மொத்தமாக 60 சிறார்கள் மற்றும் 1045 பேரை கைது செய்திருப்பதாகவும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்றிருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் நெல்லையில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாகிர் உசேன் அதிகாலை நேரத்தில் தொழுகை முடித்துவிட்டு வரும் பொழுது வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் கொலைக்கு உதவியதாக 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.