ஓய்வூதியதாரர்களுக்குப் பணபலன், 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்கக் கோரி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
இதனால் அரசுப் பேருந்துகள் வழக்கத்தை விட சற்று குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் பொதுமக்கள், பணிக்குச் செல்வோர் அவதிக்குள்ளாகியுள்ளனர். இருப்பினும் சென்னையில் பெரிய அளவில் மக்களுக்குப் பாதிப்பு இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. சென்னையில் மொத்தம் 31 அரசுப் பேருந்து பணிமனைகள் உள்ளன. இன்று (25.02.2021) காலை 06.00 மணி வரை 150 முதல் 200 பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் சராசரியாக மாநகரப் பேருந்துகள் 25% முதல் 30% வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 1,000 வழங்கப்படும்; வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குச் செல்லுங்கள், அனைத்து பேருந்துகளும் இன்று இயங்கும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.