கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய பழைய புவனகிரி சாலையைச் சேர்ந்த ஜெயசீலா (வயது 37) என்பவர் முயன்றார். ஆனால் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது எனக் கூறி தீட்சிதர்களில் சிலர் ஜெயசீலாவை தடுத்து ஆபாசமாகப் பேசியும், சாதி ரீதியாக திட்டியும், தாக்கியும் வெளியே அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஜெயசீலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, இது தொடர்பாக காவல்துறையினர் பெண்ணை தாக்கி வெளியேற்றிய 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை மாலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் பொன்னார் கூறும்போது, " கோயிலில் எந்தவித பாகுபாடுமின்றி தரிசிக்கும் உரிமை கொடுக்க வேண்டும்; சாதி ரீதியாக திட்டிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.