இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகராட்சி சார்பாக நாளிதழ்களில் கீழக்கரையில் உள்ள ஊரணிகளை தூர்வாரப்பட்டு மழைநீர் தேக்கி வைக்கும் நிலையில் உள்ளதாக விளம்பரம் செய்துள்ளனர். ஆனால் கீழக்கரையில் ஊரணிகளோ, கண்மாய்களோ கிடையாது. இவர்கள் எந்த ஊரணியை தோண்டினார்கள் என்று தெரியவில்லை. அதற்கு செலவு தொகையாக 34,400 என கணக்கும் எழுதி வைத்துள்ளனர்.
இதுபற்றி முன்னாள் கவுன்சிலர் ஜெயபிரகாஷ், இதுவரை கீழக்கரையில் ஊரணிகள் இருந்ததாக தெரியவில்லை. இவர்கள் எந்த ஊரணியை தூர்வாரினார்கள் என்பது தெரியவில்லை. இதுபற்றி 2016-2018 வரை நடைபெற்ற பணிகள் குறித்து தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளேன் என்றார்.
நாம் இதுபற்றி நகராட்சி கமிஷ்னர் (பொறுப்பு) நாராயணிடம் கேட்ட போது, கீழக்கரை இந்துக்கள் மயானகரையில் உள்ள ஊரணியை மற்றும் முத்துசாமிபுரம் ஊரணியையும் சரிசெய்ததாகவும் அதற்கான செலவு தொகை ரூ.34,400 என கூறினார். நாம் அவரிடம் நீங்கள் கூறிய இரண்டுமே ஊரணி கிடையாது. அது மட்டுமில்லாமல் அந்த இடங்களை சுத்தம் கூட செய்யவில்லை என்றவுடன் முழு விபரங்களையும் நகராட்சியில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டு சொல்கிறேன் என்று அலைபேசி எண்ணை துண்டித்துவிட்டார்.
இவர்கள் விரைவில் கடலை தூர்வாரி உள்ளோம் என்று விளம்பரம் செய்து, அதற்கான செலவு தொகையும் எழுதி மக்களை ஏமாற்றுவார்கள் போல் தெரிகிறது. ஆட்சியாளர்களுக்கு அடுத்தபடியாக அதிகாரிகளும் மக்களை ஏமாற்றுகின்றனர்.