புதுச்சேரியிலிருந்து, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மது கடத்தல் நடைபெற்று வருகிறது. போலீசார், வாகன சோதனை மூலம் அதனைத் தடுத்தும், கடத்தப்படும் மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தும் வருகிறார்கள். அப்படி நேற்று காலை 6 மணி அளவில் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை வித்தியாசமான முறையில் கடத்தி வந்த 2 பேரை விழுப்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் மதுர பாக்கம் சோதனைச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது விவசாயப் பணிக்காகப் பயன்படுத்தப்படும் டிராக்டர் டிப்பர் ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த டிராக்டரை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். டிராக்டர், அடிப் பகுதியில் யாருக்கும் தெரியாத அளவில் 40 பெட்டிகளில் 1,920 மதுபாட்டில்கள் புதுச்சேரியிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், அந்த வழியாக வந்த மற்றொரு செவர்லெட் காரை சோதனை செய்ததில், அந்த காரில் 432 மதுபாட்டில்கள் புதுச்சேரியிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. டிராக்டர் டிப்பர் மற்றும் கார் ஆகியவற்றிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், விஸ்வரெட்டி பாளையத்தைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் முரளி, கார் டிரைவர் செட்டிப்பட்டு ஐயனார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். டிராக்டர் உரிமையாளர் சிவக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா பார்வையிட்டார். மேலும், மடக்கிப்பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.