உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.