Skip to main content

புத்தகங்கள் ஒருபோதும் உங்களைக் கைவிடாது: கவிஞர் மனுஷி

Published on 03/12/2017 | Edited on 03/12/2017
புத்தகங்கள் ஒருபோதும் உங்களைக் கைவிடாது: கவிஞர் மனுஷி



நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள் ஒருபோதும் உங்களைக் கைவிடாது என்றார் யுவ புரஸ்கர் விருதாளர் மனுஷி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை உரையாற்றிய அவர் மேலும் பேசியது:

அலைபேசி எண், வங்கி எண், ஆதார் எண் என எல்லாமே எண்களாக மாறிவிட்ட சூழலில் நம்மை மனிதனாக மாற்றுவது புத்தகங்களே. தொலைக்காட்சிகளில் குழந்தைகளை ஜோட்டாபீம் பார்க்க வைப்பதைவிட பெற்றோர்கள் வாசிப்பைக் கற்றுக்கொடுக்க வேண்டும். கலையும் இலக்கியமும்தான் வாழ்க்கையில் உங்களை அடையாளப்படுத்தும். குழந்தைகளை ரோபோ மாதிரி வளர்க்காமல் அவர்களை பட்டாம் பூச்சிகளாய் சிறகடிக்க விடுவோம். அதற்கு வாசிப்புத்தான் உதவி புரியும் என்றார்.



கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கி சார் ஆட்சியர் கே.எம்.சரயு வாழ்த்திய போது, இப்படி ஒரு சிறிய ஊரில் புத்தகத்திற்கென்று இவ்வளவு பெரிய விழா நடப்பது சிறப்பானது. அதுவும் மாணவர்களை மையப்படுத்தி இந்தத் திருவிழா நடப்பதாக உணர்கிறேன். இதற்காக இந்த விழாக்குழுவினரைப் பாராட்டுகிறேன். மாணவர்கள் இளமை முதலே புத்தகங்களை வாசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். வளர, வளர பாடத்திட்டங்களைப் படிப்பதற்கே உங்களுக்கு நேரம் போதாது. சிறுவயதில் படிப்பது வாழக்கையின் அனைத்துக் கட்டங்களுக்கும் உதவும் என்றார்.

விழாவிற்கு மவுண்ட்சீயோன் பொறியியல் கல்லூரி இயக்குநர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரன் தலைமை வகித்தார். ‘மரபின் மைந்தர்கள்’ என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையா உரையாற்றினார். ஆதிகாலத்து அலங்கார மாளிகை உரிமையாளர் ஜெயபால் வாழ்த்திப் பேசினார். முன்னதாக தமுஎகச மாவட்டத் தலைவர் ரமா.ராமநாதன் வரவேற்க, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.நாகராஜன் நன்றி கூறினார்.

நிறைவு விழா

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவிற்கு உலகத் திருக்குறள் பேரவை மாவட்டத் தலைவர் சண்முக பழனியப்பன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.அமலராஜன், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் என்.செல்லத்துரை, மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் எஸ்.மணிகண்டன், கல்வியாளர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

விழாவில் கலந்துகொண்டு இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.இங்கர்சால் சிறப்புரையாற்றினார். முன்னதாக கே.சதாசிவம் வரவேற்க, சி.எஸ்.வள்ளல் நன்றி கூறினார். 

- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்