திமுக இளைஞரணி செயலாளரும் சென்னை சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் சில தினங்கள் முன்பிருந்தே மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தனர்.
இன்று காலை முதல் உதயநிதி ஸ்டாலினுக்கு திரைத்துறையிலிருந்தும் அரசியல் வட்டாரங்களிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதே போல் அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ''திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரத்தில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அகில இந்திய அளவிலான ஏ கிரேடு கபடி போட்டி நடக்க உள்ளது.
இப்போட்டியில் ப்ரோ கபடி மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆண் பெண் என இரு பிரிவாக போட்டி நடத்தப்பட உள்ளது. ஆண்கள் பிரிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே தலா 20 லட்சம், 15 லட்சம், 7.5 லட்சம், 7.5 லட்சம் என பரிசுகள் வழங்கப்பட உள்ளது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் படகுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஒவ்வொரு படகிலும் நான்கு பேர் வீதம் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 25 ரூபாயும் மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.