வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுத்தை ஒன்று பதுங்கிக்கொண்டு அந்த வழியாக செல்பவர்களை தாக்குகிறது. அப்படி தாக்கியதில் 5 பேர் காயம்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் டிசம்பர் 27ந் தேதி இரவு கொல்லப்பள்ளி பகுதியில் பட்டியில் இருந்த ஆடுகளை வேட்டையாடியது அந்த சிறுத்தை. இதில் 13 ஆடுகள் பலியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுத்தை தங்களை தாக்கிவிடும்மோ என பயந்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வரவே வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர்.
இந்நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து அதற்குள் ஆடு ஒன்றை கட்டிவைத்து சிறுத்தைக்கு ஆசைக்காட்டி பிடிக்க காத்துள்ளனர். அது இதுவரை சிக்கவில்லை. அதோடு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் மருத்துவக்குழு ஒன்றை அழைத்துள்ளனர் வனத்துறையினர். மருத்துவர்கள் மூலமாக மயக்க ஊசியை துப்பாக்கி மூலமாக சிறுத்தையின் உடலில் பாய்ச்சி பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
தனது தொகுதியில் சிறுத்தையின் அட்டகாசம் அதிகரித்துள்ள தகவல் மற்றும் விலங்குகள், மனிதனை தாக்கியது தொடர்பாக வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான நிலோபர்கபில்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு, சிறுத்தை பதுங்கியுள்ளதாக கூறப்படும் கரும்பு தோட்டத்தை பார்வையிட்டார்.