சட்டத்தில் இடமிருந்தால்தான் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று காலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காவிரி வழக்கில் தமிழகத்தின் வாதங்கள் முழுமையாக முன்வைக்கப்பட்டன. அரசியலுக்காக தமிழகம் வாதங்களை முன்வைக்கவில்லை என வைகோ பேசுகிறார். காவிரி வழக்கில் தமிழக வழக்கறிஞர்கள், 13 நாட்கள் தங்களது வாதங்களை எடுத்து வைத்துள்ளனர்.
அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது அரசியலுக்காகவே பேசப்படுகிறது. உறுப்பினர்களாக இருந்துகொண்டு வலியுறுத்தும்பொழுதே இதுவரை எதுவும் நடக்கவில்லை. காவிரி விவகாரத்தில் தி.மு.க. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து வலியுறுத்துவோம். 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ளது என கூறினார். மேலும், சட்டத்தில் வழிவகை இருந்தால்தான் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என கூறினார்.