தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று எந்த அளவிற்கு பரவி வருகிறதோ அதே அளவிற்கு கருப்பு பூஞ்சையின் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 க்கும் அதிகமானோர் இந்த கருத்து பூஞ்சை நோயால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நோய் குறித்த விவரங்களை இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய காது, மூக்கு, தொண்டை நிபுணர் ஜானகிராமன் கூறுகையில்,
''கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி கருப்பு பூஞ்சை குறித்து முதல் அலை கரோனா பாதிப்பு ஏற்பட்ட போது நான் இந்த நோய் குறித்து என்னுடைய முகநூல் பதிவில் பதிவிட்டிருந்தேன். ஆனால் அப்போது யாரும் இதைக் குறித்து கவலைப்படவில்லை.
கருப்பு பூஞ்சையானது ஒரு உயிர்க்கொல்லி நோய். இது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒரு நபருக்கு வரும் போது அதற்கான அறிகுறிகள் முதலில் மூக்கு பாதிப்படையும் அதன் பிறகு கண் அதன்பிறகு மூளை ஆகிய இந்த மூன்றும் பாதிப்படைந்தால் ஒரு மனிதன் உயிர் இழக்க நேரிடும் என்று கூறினார்.
இந்த பூஞ்சை பாதிப்பு இருக்கிறது என்பதை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். எனவே கரோனா பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் சிகிச்சைபெற்று வீடு திரும்பி இருந்தாலும் 20 அல்லது 30 நாட்களுக்குப் பிறகும் கூட இந்த கருப்பு பூஞ்சை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்தக்கூடிய முகக் கவசம்தான். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் தொடர்ச்சியாக இரண்டு நாள் ஒரு வாரம் என்று முகக் கவசங்கள் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக இந்த நோய் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக இந்த சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில் கொடுக்கப்பட்ட ஸ்டீராய்டு மருந்துகளால் சர்க்கரையின் அளவு கூடும் போது இந்த நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
இந்த கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். அதோடு ஆம்போடெரிசன், போசகோனஸ்கோ என்ற மருந்து வகைகளை நிச்சயம் பயன்படுத்தினால் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆனால் தற்போது இந்த மருந்துகள் கிடைப்பது மிக அதிக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மடங்கு விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்'' என்று தெரிவித்தார்.