மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ள நிலையில் சென்னை வந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து திடீரென அமித்ஷா வந்திருந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டதால் அங்கிருந்த பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக தொண்டர்கள் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர ஓட்டிகளை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகர் கரு.நாகராஜன், ''மத்திய அமைச்சருக்கு எவ்வளவோ அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. அந்த அச்சுறுத்தல்களை எல்லாம் எதிர்க்கக்கூடிய மாவீரன் அமித்ஷா. தமிழக மண்ணில் பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுகிறது. என்.ஐ.ஏ நாடு முழுவதும் நூறு பேரை கைது செய்தால் அதில் 40 பேர் தமிழகத்தில் கைது செய்யும் நிலைமையில் தான் தமிழகம் இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது உச்சகட்ட பாதுகாப்பு உடைய தலைவர் வரும்போது மின்சார வயரை துண்டிக்கிறார்களோ அல்லது மின் இணைப்பை துண்டிக்கிறார்களோ தெரியாது அவர் வருகின்ற பொழுது இங்க இருக்கக்கூடிய அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற இருட்டான நிலையை இந்த மவுண்ட் ரோட்டுக்கு ஏற்படுத்தலாமா? அவர் இருட்டில் இறங்கி நடந்து செல்கிறார். இருட்டைக் கண்டு பயந்து ஓடுவேன் என்று அவர் ஓடவில்லை. கைது செய்ய வரும் பொழுது ஐயோ ஐயோ என்று கத்தும் தலைவர் அல்ல அவர். இது மிகப்பெரிய தவறு தமிழக அரசை கண்டிக்கிறோம்'' என்றார்.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நம்முடைய அரசு மற்றும் அரசு துறைகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அரசு துறைகளை பொறுத்தவரை மிக நேர்த்தியாக செயல்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். சில இடங்களில் நம்மையும் தாண்டி இதுபோன்ற பவர் கட் நடக்கிறது. அது எதிர்பாராத விதமாக அமைச்சர் வரும் பொழுது சரியாக காரில் இருந்து இறங்கி நமது தொண்டர்களை பார்த்து நடந்து வரும் பொழுது நடந்து விட்டது. என்னுடைய அன்பான வேண்டுகோள் எல்லாத்தையும் நாம் அரசியல் பண்ணக்கூடாது. இதில் நம் தமிழ்நாட்டினுடைய கௌரவம் இருக்கிறது. நம்முடைய கௌரவத்தை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. டிஎன்இபி முறையாக பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேநேரத்தில் நமது தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. தவறு நடந்தால் அதற்கான அதிகாரிகள் இருக்கிறார்கள். அதிகாரிகள் செயல்படுத்துவார்கள். பழுது இருந்தால் நீக்குவார்கள். தவறு இருந்தால் நடவடிக்கை எடுப்பார்கள். பொதுமக்கள் மீது கை வைப்பது, அவர்களிடம் சண்டைக்கு செல்வது, பவர் கட் வந்ததற்கு பொதுமக்களை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறு. கண்டிப்பாக நாங்கள் ஆக்சன் எடுப்போம். இப்பொழுதுதான் இது எங்களுடைய கவனத்திற்கு வந்திருக்கிறது'' என்றார்.