திருச்சி பெரிய மிளகு பாறை காமராஜ் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று பிரதமர் மோடியின் படம் மாட்டப்பட்டது. இந்நிலையில், அந்த படத்தை திமுக கவுன்சிலர் ராமதாஸ் உடைத்து சாக்கடையில் வீசியதாகவும், பாஜக கண்டோன்மெண்ட் மண்டல் தலைவரை தாக்கியதாகவும் பாஜகவினர் குற்றச்சாட்டு வைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கவுன்சிலர் ராமதாஸை கைது செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அங்கு கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும், காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. அதனால், அனுமதியின்றி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.