திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் மாவட்டத் தலைவர் வேதானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்படும் எனத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதி எண் 66-ஐ நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநிலச் செயலாளர் லோகேஷ் உட்படக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கை தொடர்பான மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமாரிடம் வழங்கினர்.