நெஞ்சுவலி இருப்தாகக் கூறி நாடகமாடிய பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை, காவல்துறையினர் பலவந்தமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பாரத மாதா நினைவக வாயில் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்த வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பாஜக சார்பில் பாத யாத்திரை நடந்தது. அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான கே.பி.ராமலிங்கம் யாத்திரையைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவருடைய தலைமையில் கட்சியினர் ஊர்வலமாகச் சென்று, பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்ரமணிய சிவா நினைவிடத்தை அடைந்தனர். அந்த நினைவிட வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கட்சியினர் முயன்றனர்.
ஆனால் நினைவாலய வாயில் கதவு பூட்டப்பட்டு இருந்தது. நுழைவு வாயில் பூட்டைத் திறந்து விடும்படி அங்கிருந்த ஊழியரிடம், கே.பி.ராமலிங்கம் கேட்டார். ஆனால் அந்த ஊழியரோ, உயர் அதிகாரிகளின் உத்தரவின்றி கதவைத் திறந்து விட முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கே.பி.ராமலிங்கம், கீழே கிடந்த கல்லை எடுத்து பாரத மாதா நினைவக வாயில் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் அவர் தலைமையில் பாஜகவினர், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாகவும், அத்துமீறி நுழைந்ததாகவும் கூறி கே.பி.ராமலிங்கம் மற்றும் பாஜகவினர் மீது பாப்பாரப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கே.பி.ராமலிங்கத்தை ஆக. 14ம் தேதி கைது செய்தனர். சிறைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு அவருக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு ரத்தக்கொதிப்பும், நெஞ்சுவலியும் இருப்பதாகக் கூறியதை அடுத்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இது ஒருபுறம் இருக்க, அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க பென்னாகரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, கே.பி.ராமலிங்கம் உடல்நலம் தேறியது. அவர் குணமடைந்ததாக மருத்துவர்கள் சான்றளித்தனர். இதனால் அவர், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை (ஆக. 18) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைப்பதற்காக பாப்பாரப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வந்தனர். ஆனால் அவர்களிடம் கே.பி.ராமலிங்கம் தனக்கு நெஞ்சு வலி இருப்பதாகவும், தன்னால் சிறைக்கு வர முடியாது என்றும் கூறினார். ஆனாலும் காவல்துறையினர், அவரை பலவந்தமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.