தமிழகத்தில் ஏப்ரல் 14ந் தேதி சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவதில் வி.சி.க.வினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு கலவரமாகி சாலை மறியல் வரை சென்றது.
அதே போல கடந்த சனிக்கிழமை இரவு புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நாஞ்சில் சம்பத் தலைமையில் திமுகவினர் ஒரு பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக மதியமே அறந்தாங்கி வந்த நாஞ்சில் சம்பத், ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார். பட்டிமன்ற விழா மேடைக்கு கிளம்பத் தயாரான போது அங்கு திரண்ட பாஜகவினர் ‘கோ பேக் நாஞ்சில் சம்பத்’ என்ற முழக்கத்துடன் கருப்புக் கொடி காட்டினர். அப்போது அங்கு எதிரே நின்ற திமுகவினர் பதிலுக்கு முழக்கமிட அங்கு பரபரப்பு பற்றிக் கொண்டது. போலீசார் தடுக்க முயன்றும் முடியவில்லை.
நாஞ்சில் சம்பத் விழா மேடைக்கு கிளம்பும் போது, பாஜகவினர் மேலும் முழக்கமிட சிலர் அடிக்கவும் பாய்ந்தனர். இந்தப் பிரச்சனையில் திமுக - பாஜகவினர் தண்ணீர் பாட்டில்களை மாற்றி மாற்றி வீசிக் கொண்டனர். இதனால் அங்கே மேலும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் பாஜக மாஜி பெண் நிர்வாகி காயமடைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அந்தக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாஜகவினரை கைது செய்தனர்.
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தராஜனை நாஞ்சில் சம்பத் அவதூறாகப் பேசியதால் இந்த கருப்புக் கொடி போராட்டம் என்றனர் பாஜகவினர்.