நாட்டின் 77 வது சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் கிராம சபா கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் கரூர் மாவட்டம் மூக்கணாங்குறிச்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கலந்துகொண்டார்.
அப்போது அந்த கூட்டத்தில் பேசிய ஒருவர், தேர்தல் நேரத்தில் 20 நாட்களுக்குள் 6 தொகுதிகளைச் சுற்றி வரும் நீங்கள், மற்ற நேரங்களில் மக்களைக் கண்டுகொள்வதில்லை. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் உங்களை நாங்கள் பார்க்கிறோம். ஓட்டு கேட்கும் போது வருவீர்கள், பிறகு அடுத்த தேர்தலுக்குத்தான் மீண்டும் மக்களைச் சந்திப்பீர்கள்” என ஜோதிமணி எம்.பியிடம் வாக்குவதத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் ஜோதிமணி எம்.பி நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “எனது கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூக்கணாங்குறிச்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணிநேரம் வரை கூட்டம் அமைதியாகவும், சிறப்பாகவும் நடந்தது. அப்போது திடீரென ஒரு நபர் கூட்டத்திற்குள் வந்தார். அவருடன் மற்றொரு நபர் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே வந்தார். அப்போது அந்த நபர் பிரச்சனை செய்ய ஆரம்பித்தார். ஆனால் அதற்கெல்லாம் பயந்து ஓடாமல் தெளிவாக அவரை எதிர்கொண்டு, மக்கள் பிரச்சனை குறித்து நீங்கள் எப்போது மனு கொண்டு வந்தீர்கள் எனறு பல கேள்விகளை முன்வைத்தேன். ஆனால் அந்த நபரால் பதில் சொல்லமுடியவில்லை.
கரூர் தொகுதி முழுவதும் 2 வருடம் நன்றி சொல்லி மனு வாங்கியிருக்கிறேன். அதனை நிறைவேற்றியும் கொடுத்திருக்கிறேன். இப்படித் தொடர்ந்து தொகுதி முழுவதும் சுற்றி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றி வருகிறேன். ஆனால். என்னைப் போன்று ஒருவர் மீது பாஜக பணம் கொடுத்து இப்படி ஒரு மலிவான செயலை செய்ய வைத்துள்ளது. அப்படிப் பணம் கொடுத்துப் பேசும் நபரின் வீடியோ ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் வெட்டப்பட்டு பாஜகவினரால் பரப்பப் படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.