சென்னையில் பிரியாணி கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டதற்கு, அமித்ஷாவின் பி.ஏவுக்கு போன் போடுவேன் என மிரட்டிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை முத்தையா தெருவில் பிரியாணி கடை வைத்திருப்பவர் சையது அபுபக்கர். இவரது கடைக்கு நேற்று இரவு கடையை மூடும் நேரத்தில் போதையில் வந்த மூன்று பேர் சிக்கன் ரைஸ் வேண்டும் என சையதுவிடம் சொல்லியுள்ளனர். அவர்கள் மூவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் சிக்கன் ரைஸ் பார்சல் செய்து கொடுத்திருக்கிறார். மூன்று சிக்கன் ரைஸுக்கும் 180 ரூபாய் பணம் கேட்டுள்ளார் சையது. ஆனால் போதையில் இருந்த அவர்களில் ஒருவர் ''நான் பாஜகவின் பகுதிச் செயலாளர் என்னிடமே பணம் கேட்கிறாயா?'' என கொலை மிரட்டல் விட்டதோடு ''அமித்ஷாவின் பி.ஏவுக்கு போன் செய்தால் ஆயிரம் பேர் வருவாங்க. மதக்கலவரம் நடக்கும்'' எனவும் மிரட்டல் விட்டு தகராறில் ஈடுபட்டார்.
இதுகுறித்து உடனடியாக ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், ரோந்து வந்த போலீசார் மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், திருவல்லிக்கேணி பாஜக மேற்குத்தொகுதி செயலாளர் பாஸ்கர், திருவல்லிக்கேணி பாஜக பகுதிச் செயலாளராக இருக்கக்கூடிய புருசோத்தமன், சூர்யா என்ற மூன்று நபர்களும் கலாட்டா செய்து மிரட்டல் விட்டது தெரியவந்தது. உடனே நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாஸ்கர் மற்றும் புருசோத்தமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் சூர்யா என்ற மூன்றாவது நபர் தலைமறைவானார். இவர்கள் செய்த தகராறு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனையும் போலீசார் முக்கிய சாட்சியமாக வைத்துள்ளனர்.