நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் நேற்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது.
நேற்று வரை அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய பாமக எடுத்த இந்த திடீர் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் பாஜகவின் தமிழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.