கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாஜக நிர்வாகி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள வேப்பாளம்பட்டியில் தனியார் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்குச் செல்லும் வழியில் வியாழக்கிழமை (நவ. 24) காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஊத்தங்கரை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சடலத்தின் கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்டதற்கான காயம் இருந்தது. மர்ம நபர்கள் அவரை கழுத்து அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஊத்தங்கரை டிஎஸ்பி அமலா அட்வின், ஆய்வாளர்கள் பார்த்திபன், லட்சுமி, பத்மாவதி மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர்.
முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் திருப்பத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்த கலி கண்ணன் (52) என்பது தெரிய வந்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக திருப்பத்தூர் நகர பாஜக துணைத்தலைவராக இருந்து வந்துள்ளார். உள்ளூரில் சொந்தமாக இரும்பு கடை, குடிநீர் கேன் சப்ளை ஆகிய தொழில்களைச் செய்து வந்துள்ளதோடு, வட்டித்தொழிலும் செய்து வந்துள்ளார். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர், பர்கூர் டி.எஸ்.பி. மனோகரன் ஆகியோரும் நிகழ்விடம் சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். எனினும், கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. நவ. 23ம் தேதி இரவு திருப்பத்தூரில் அவருடைய வீடு அருகே மர்ம நபர்கள் நான்கு பேர் நோட்டம் விட்டுள்ளதாகவும், அவர்கள் கலி கண்ணனை காரில் கடத்திச்சென்று தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கலி கண்ணன் பேசியதாகவும், அதைக் கண்டித்து மர்ம நபர்கள் சிலர் அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்போது பாஜகவினர் அளித்த புகார் காவல்துறை விசாரணையில் உள்ளது. அப்போது மிரட்டிய கும்பலுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாமோ என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரிக்கின்றனர். கொடுக்கல் வாங்கல் காரணமாகக் கொல்லப்பட்டாரா? அல்லது மத ரீதியான மோதலில் கொலை நடந்ததா? மர்ம நபர்கள் அவரை வேறு இடத்தில் வைத்துக் கொலை செய்துவிட்டு, ஊத்தங்கரை அருகே கொண்டு வந்து சடலத்தை வீசிச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
கொலையுண்ட கலி கண்ணன் குடும்பத்தினரிடமும் தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவருடைய செல்போனில் பதிவாகியுள்ள எண்கள், அவரிடம் கடைசியாக பேசிய எண்களின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. திருப்பத்தூரில் இருந்து ஊத்தங்கரைக்கு வரும் வழியில் சாலையோரம் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
கலி கண்ணன் கடைசியாக எங்கு இருந்தார்? அவரை கடைசியாக சந்தித்துப் பேசிய நபர்கள் உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடற்கூராய்வு நடந்து வரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை அருகிலும், கலி கண்ணனின் சொந்த ஊரிலும் காவல்துறை பந்தோபஸ்து பலப்படுத்தப்பட்டு உள்ளது.