கோவைக்கு வந்த உகாண்டா நாட்டு பெண்ணின் வயிற்றில் இருந்து, 4 கோடி மதிப்பிலான போதை கேப்சூல்கள், கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6ம் தேதி, ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு, 'ஏர் அரேபியா' விமானம் ஒன்று வந்தது. இதில், உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீசார் வழக்கம்போல், விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரையும் பரிசோதித்துள்ளனர். அதில், சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட உகாண்டா பெண்ணை, தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, அந்தப் பெண் பயணி வயிற்றில் போதை மாத்திரைகள் விழுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து போதைப் பொருட்களை வெளியே எடுப்பதற்காக, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இரண்டு நாளாக இனிமா கொடுத்து மருத்துவர்கள் அந்த பெண் வயிற்றில் இருந்து 81 மாத்திரை குப்பிகளை எடுத்தனர். இதன் மதிப்பு 4 கோடி என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, அந்தப் பெண்ணை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.