மத்திய அரசானது தொடர்ந்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. தனியார்மயமாதலால் தேசத்தின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகும் என்றும் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தொடர்ந்து மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிற்சங்கங்கள் தங்களுடைய கண்டனத்தைப் பதிவுசெய்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி பொன்மலை ரயில்வே கோட்டப் பணிமனை முன்பு தொழிலாளர்களுக்கு விரோதமாக மத்திய அரசின் தனியார்மயமாக்கலைக் கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஆர்.எம்.யூவின் துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன், “விரைவு, சரக்கு ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே உற்பத்திப் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றைத் தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது.
41 பாதுகாப்பு உற்பத்தி பணிமணிகளை 7 கார்ப்பரேஷன்களாக மாற்றி 76 ஆயிரம் மத்திய அரசு பாதுகாப்பு துறை ஊழியர்களின் நிரந்தர வேலையைப் பறிக்கக் கூடாது” என்றும் கேட்டுக்கொண்டார். “தனியார்மயமாக்கல் என்பது தேசத்தை அழிப்பதற்கான செயலாகும் எனவே மத்திய அரசு இந்த தொழிலாளர் விரோதப் போக்கினைக் கைவிட வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.