விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரில் உள்ள முத்து தெருவில் வசிப்பவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி கண்ணகி, செஞ்சி சிங்கவரம் சாலையில் மளிகைக் கடை வைத்து நடத்திவருகிறார். நேற்று முன்தினம் (27.10.2021) இரவு மளிகை கடை வியாபாரத்தை முடித்துக் கடையைப் பூட்டிவிட்டு செட்டிபாளையம் பகுதியில் உள்ள அந்தோணியார் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு தனது மகளுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த வாலிபர் கண்ணகியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி அவரை கீழே தள்ளிவிட்டுள்ளார்.
பின்னர், அவரது கழுத்தில் இருந்த 13 பவுன் தாலிச் செயினை அறுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார். இதேபோன்று செஞ்சி அருகில் உள்ள சிறுகடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் தருமர் மனைவி பானுமதி. இவர், அவரது வீட்டுவாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 வாலிபர்கள் முகவரி கேட்பது போல் பானுமதியிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிச் செயினை அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் மேற்பார்வையில் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தனிப்படை போலீசார் தாலிச் செயின் கொள்ளையர்களைத் தீவிரமாக தேடிவருகிறார்கள். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்துவரும் கொள்ளையர்கள் தனித்திருக்கும் பெண்கள் கழுத்தில் உள்ள தாலிச் செயினைக் குறிவைத்து பறிக்கும் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் பெண்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.