சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா சனிக்கிழமையன்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "நடராஜர் கோவிலில் தேர் தரிசன விழா நடைபெற உள்ள நிலையில், இந்த கோவிலை தீய சக்திகள் அபகரிக்க பல்வேறு முறை முயற்சி செய்தனர். இந்தக் கோவிலை எடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு இந்து கோவில்களை இடித்து வருகிறார்கள். சிதம்பரத்தில் மத விழாக்களுக்கு அரசிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை. முதல்வர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களுக்கு கரோனா வராதா? இந்த தில்லை கோயிலில் தேர் ஓடினால் தான் கரோனா வருமா? இந்து கோவில்களில் காட்டப்படும் அராஜக நடவடிக்கைகளை மற்ற சமூக கோவில்களில் காட்ட இந்த ஸ்டாலின் அரசுக்கு தைரியம் இருக்கா?.
பாரதிய ஜனதா கட்சியினர், இந்து மக்கள் போராடியாவது தேர் திருவிழாவை நடத்திக் காட்ட வேண்டும். தில்லையில் தேரோட்டம் நடக்கவில்லை என்றால் மன்னனுக்கு கேடு என சொல்லப்பட்டுள்ளது. தற்போது மன்னர் என்றால் முதல்வர். பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு அடுத்த நிமிடமே அவர் புட்டுபுட்டு வைத்துவிட்டார்.
கோவில் நிலத்தை காப்பாற்றாமல் கொள்ளை அடிக்கும் துறைதான் அறநிலைத்துறை. கோவில் தங்கங்களை கொள்ளையடிப்பதற்காக ஐயப்பன் சத்தியம் என சேகர்பாபு வேஷம் போடுகிறார். அவர் பதவி ஏற்கும் போது ஐய்யப்பன் சத்தியம் என பதவி ஏற்றிருக்க வேண்டும் யாரை ஏமாற்றும் வேலை இது. இந்து விரோத ஸ்டாலின் அரசு ஒவ்வொரு நாளும் இந்து கோவில்களை எடுக்க வேண்டுமென மிரட்டுகிறது. சாராயம் காய்ச்சி, கட்டப்பஞ்சாயத்து செய்த குண்டர்களை வைத்துக் கொண்டு இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படாதீர்கள் அதனை தோலுரித்து காட்டுவேன்” என்று பேசினார்.
கோவில் விழாவின் காரணமாக ஒவ்வொரு நாளும் சாமி வீதி உலா வரும். ஆனால், எச்.ராஜா வந்த அன்று சாமி வீதி உலா எப்போதும் கிளம்பும் நேரம் இல்லாமல் தாமதமாக கிளம்பியதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.