திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் பலக்கனூத்து ஊராட்சிக்குட்பட்ட புதுஎட்டமநாயக்கன்பட்டியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பலக்கனூத்து கிராமத்தில் ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பு புதுஎட்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அனைவரும் தங்கள் பகுதிக்கு பகுதி நேர நியாயவிலைக்கடையைத் திறக்க வேண்டுமென ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த கோரிக்கையை உடனடியாக ஏற்று புதுஎட்டமநாயக்கன்பட்டியில் பகுதி நேர நியாயவிலைக்கடையைத் திறக்க அமைச்சர் ஐ. பெரியசாமி உத்தரவிட்டார். அதன்படி புதுஎட்டமநாயக்கன்பட்டியில் பகுதி நேர நியாயவிலைக்கடை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிமன்றத் தலைவர் செல்வராணி ராமசாமி வரவேற்றுப் பேசினார்.
விழாவில் பகுதி நேர நியாயவிலைக்கடையைத் திறந்து வைத்துவிட்டு விழா மேடைக்கு வரும்போது புதுஎட்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அமைச்சர் ஐ. பெரியசாமி கையைப் பிடித்து பொதுமக்கள் நலன் கருதி புது எட்டமநாயக்கன்பட்டியில் பகுதி நேர நியாயவிலைக்கடையைத் திறந்து வைத்ததற்கு நன்றி தெரிவித்தனர். அப்போது அவரிடம் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “கட்சி, ஜாதி, பேதமின்றி அனைவருக்கும் நலத் திட்டங்கள் சென்றடையும் வகையில் தமிழக முதல்வர் மக்கள் நலனுக்காக ஆட்சி செய்கிறார் என்பதற்கு இதுவே உதாரணம்” என்றார்.
அதன்பின்னர் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கிவிட்டு பேசும்போது, “தமிழக முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள மண் சாலைகள் தரமான தார்ச் சாலைகளாக மாற உள்ளன. பொதுமக்களுக்கு பயன் தரக்கூடிய நலத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த நமக்கு நாமே திட்டம் உள்ளது. அதன்படி பொதுமக்களுக்கு பலன் தரக்கூடிய நலத்திட்டங்கள் செயல்படுத்த நமக்கு நாமே திட்டத்திற்கு பணம் செலுத்தவும் நான் தயாராக உள்ளேன். எந்த ஒரு பகுதி மக்களும் தங்கள் பகுதியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தவில்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லாதபடி ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் நலத் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்