கடந்த ஜூன் 23ம் தேதி, ஊட்டி அருகிலுள்ள காந்தல் பகுதியில் ஆஷிகா பர்வீன்(22) என்ற பெண், காபியில் சையனைடு கலந்து கொடுத்து கொல்லப்பட்டார். இந்நிலையில், ‘ஆஷிகா பர்வீன் ஒரு இந்துப் பெண் . அவரை லவ்ஜிகாத் மூலம் இஸ்லாமியராக மாற்றி இம்ரான்கான் திருமணம் செய்து கொண்டார். வரதட்சணைக் கொடுமை செய்து கொலை செய்தனர்.’என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவியது.
சமூக வலைத்தளங்களில் தவறான தகவலைப் பரப்பியது யார்? என சைபர் க்ரைம் காவல்துறையினர் உதவியுடன் ஊட்டி காவல்துறையினர் தேடி வந்தனர். அப்போது, அருப்புக்கோட்டையைச் சார்ந்த பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல்தான் தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் என்பதைக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஊட்டி டவுண் காவல்நிலையத்தில் ஆஷிகா பர்வீனின் அம்மா நிலாபர் நிஷா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவான நிலையில், அருப்புக்கோட்டையில் வெற்றிவேலைக் கைது செய்து விசாரணைக்காக ஊட்டிக்கு அழைத்துச் சென்றனர்.