விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று முன்தினம் மாலை பாஜக சார்பில் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தின் போது விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கலிவரதன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கலிவரதன், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி, அமைச்சர் பொன்முடி ஆகியோர் குறித்து அவதூறான வார்த்தைகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விக்கிரவாண்டி திமுக நகரத் துணைச் செயலாளர் சித்ரா என்பவர், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாகப் பேசிய கலிவரதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று அதிகாலை கண்டாச்சிபுரம் அருகே உள்ள கலிவரதன் சொந்த ஊரான தேவனூருக்குச் சென்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை அதிரடியாகக் கைது செய்தனர். பின்பு கலிவரதனைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.