கோவையில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருப்பது தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், சித்தாபுதூரில் உள்ள பா.ஜ.க.வின் மாநகர் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதேபோல், ஒப்பண்ணக்கார வீதியில் உள்ள ஒரு துணிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. நல்வாய்ப்பாக இரண்டு இடங்களிலும் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்யக் கோரி, பா.ஜ.க.வினர் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறிப் போராட்டத்தைக் கலைத்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை தொடர்ந்து பொள்ளாச்சியிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு பா.ஜ.க. நிர்வாகிகளின் கார்கள், ஆட்டோக்கள் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.