நுங்கம்பாக்கத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 பாஜகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நுங்கம்பாக்கம் பகுதியில் திடீரென பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடச் செல்ல வேண்டாம்; இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது; அதிகாரிகளுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது என்று சொன்னார்கள். காவல்துறைக்கு எல்லா விதத்திலும் நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம். தமிழகத்தில் 125 இடத்திற்கு மேலே பாஜக புகாரை வாங்கி காவல்துறை வைத்துள்ளது. நாங்கள் சட்டத்தை கையில் எடுக்கப் போவது கிடையாது. நாங்கள் சாமானிய மனிதர்கள். காவல்துறை சட்டத்தை கையில் எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எப்படி. இன்று சமூக வலைத்தளங்களில் பதிவு போடுபவர்களை எல்லாம் காலை இரண்டு மணிக்கு, மூன்று மணிக்கு கைது செய்கிறார்கள். ஆனால் சனாதன தர்மத்தை வேரறுப்பேன்; இந்து தர்மத்தை வேரறுப்பேன் என்று சொன்னவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை'' எனக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் நுங்கம்பாக்கம் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாலை நேரத்தில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புபவர்கள் இந்த போராட்டத்தால் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், சட்ட விரோதமாக கூடுதல், முறையற்ற தடுத்தல், பொதுத்தொல்லை தருதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.