நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்பில் ஈடுபட்டு வருகிறது. சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் பேசிய சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் பேசுகையில், ''பாஜக அரசை விரட்டி அடிப்பதற்கான தேர்தல் வியூக தளபதியாக, ஆளுமையாக விளங்குபவர் ஸ்டாலின். எதிர்க்கட்சிகளை யார் ஒருங்கிணைக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தோடு இறுமாப்போடு இருந்தவர்கள் மோடி அமித்ஷா கும்பல். ஆனால் ஒருங்கிணைக்க முடியும் என சாதித்துக் காட்டியவர் மு.க.ஸ்டாலின். பாஜகவின் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் இந்தியாவில் எந்த மாநிலத்தை கண்டும் அச்சமில்லை தமிழ்நாட்டை கண்டு தான் அச்சம்.
இந்தியாவில் வேறு எந்த தலைவரை விடவும் மோடி, அமித்ஷாவுக்கு அச்சம் இருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டு தான் அவர்களுக்கு அச்சம். பாஜகவுடன் நட்பு பாராட்டி இருந்தால் செந்தில் பாலாஜி சிறைக்கு போயிருக்க வேண்டிய தேவையில்லை. பாஜகவை விரும்பி இருந்தால் பொன்முடி பதவியை இழக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு இருக்காது. கலைஞரின் அரசியல் வாரிசு என்பதனால் சமூகநீதியை பாதுகாப்பது நமது நோக்கம்; அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது தான் நோக்கம்; ஜனநாயகத்தை பாதுகாப்பது தான் நோக்கம் என்று எத்தனை நெருக்கடி வந்தாலும் அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள தயாரான நெஞ்சுரத்தோடு பாஜக அரசை திரட்டி அடிப்பதற்கான வியூகத்தை அமைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி தனது கால்களால் இந்தியாவை அளந்திருக்கிறார்'' என்றார்.