தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களிலும் அனுமதிபெற்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படும் இந்நிலையில் இந்த ஆண்டு பிஸ்கட் பிள்ளையார், காமாட்சி விளக்கு பிள்ளையார் என பல்வேறு பொருட்களில் பிள்ளையார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை திரு.வி.க.நகர். கென்னடி சதுக்கம் திருவள்ளுவர் தெருவில், 5000 மேரி பிஸ்கட்கள் கொண்டு விநாயகர் சிலையை வடிவமைத்து வைத்துள்ளார்கள். சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலை மெகா மார்ட் அருகில், அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோயில் அருகில், 'ஸ்ரீ மண்வளம் காக்கும் மகா விநாயகர்' என்னும் பெயரில், விவசாயி போல் தலைப்பாகை அணிந்து ஏர் மற்றும் மண்வெட்டி எடுத்துச் செல்லும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் முதல்பிரதான சாலையில் 42 அடியில் 6001 தீபார்த்தனை பித்தளை தட்டாலும், 901 காமாட்சி பித்தளை விளக்குகளாலும், 3001 சங்குகளாலும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அகரத்தில் 500 கிலோ மஞ்சள்களால் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சென்னை புழல் கதிர்வேடு மூர்த்தி பேருந்து நிறுத்தம் செங்குன்றம் பிரதான சாலையில் ஆஞ்சநேயர் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போல் சிலை வைக்கப்பட்டுள்ளது.