வாங்க சூடா ஒரு டீ சாப்பிட்டு போலாம் என நண்பர்களை அழைப்பதும், நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு டீ கொடுத்து உபசரிப்பதும் நமது பண்பாடு.. இப்போதெல்லாம் பலரும் சொல்வது சீனி சர்க்கரை என்கிற அஸ்கா சர்க்கரை டீ குடித்தால் சுகர் வருகிறது ஆகவே நாட்டுச் சர்க்கரை டீ குடித்தால் நல்லது என்ற கருத்து நிலவுகிறது. இந்த நாட்டுச் சர்க்கரை உடலில் எந்த நோயையும் கொடுக்காது என்ற உறுதியான நம்பிக்கைதான் அதற்கு காரணம். இது முற்றிலும் உண்மையும் கூட ஆனால் அந்த நாட்டுச் சர்க்கரை கலப்பிடம் இல்லாமல் இருக்க வேண்டும்.நாம் வாங்கும் நாட்டு சர்க்கரை அப்படி தூய்மையாக இருக்கிறதா என்றால் நூறு சதவீதம் இல்லை. அதிலும் கலப்படம் செய்து வருகிறது வியாபார கும்பல்.
இதில் கொடுமை என்னவென்றால் உயிரை கொல்லும் ரசாயன வேதிப் பொருட்களை கலக்குகிறார்கள் என்பதுதான் அபாயகரமான செய்தி.
இன்று ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கலைவாணி கவுந்தப்பாடியில் உள்ள நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்க குடோனுக்குச் சென்று அதிரடியாக ஆய்வு செய்தார். அதில் உள்ள 70 குடோன்களிலும் பரிசோதனை செய்து 9 உணவு மாதிரிகளை எடுத்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
"சார் இந்த நாட்டுச் சர்க்கரையில் அஸ்கா கலப்பதோடு ஹைட்ரோஸ், சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட் என பல ரசாயன வேதிப் பொருட்களை கலக்குகிறார்கள். இதை பயன்படுத்தும் மக்களுக்கு கேன்சர் நோய் உட்பட பல வியாதிகள் வந்து உயிரை கொல்லும் அபாயம் உள்ளது" என்கிறார்கள் அதிகாரிகள் .
ஏற்கனவே இது போன்ற ரசாயன வேதிப் பொருட்களை நாட்டுச் சர்க்கரையில் கலந்ததாக 17 வழக்குகள் உற்பத்தியாளர்கள் மீது ஈரோட்டில் உள்ளது. நாட்டுச் சர்கரையை நம்பி டீ குடித்தால் அதில் உள்ள ரசாயனம் மனிதனை குடிக்கும்.
உணவுப் பொருளில் கலப்படம் செய்யும் கொடுங்கோல் வியாபாரிகளுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்று அதிகாரிகள் ஆய்வுகளை வெளிப்படையாக செய்து கலப்படத்தை தடுக்க வேண்டும் என்பதே உணவு சுகாதர நிபுணர்களின் கோரிக்கை.