திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் ஸ்விட்ச் போர்டு தயாரிக்கும் கம்பெனியை மணிகண்டன், கார்த்தி, முருகேசன் ஆகியோர் நடத்திவந்தனர்.
கரோனாவிற்குப் பிறகு மீண்டும் சூடுபிடித்துள்ள இந்த சுவிட்ச் போர்டு தயாரிக்கும் தொழிலுக்கு, 8 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதிகமான ஆர்டர்கள் வந்துள்ளது. இந்நிலையில், சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள மரக்கட்டைகள், மரச்சாமான்கள் சுவிட்சுகள் உள்ளிட்டவைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (15.12.2020) விடியற்காலை 3 மணி அளவில் கடைகளில் இருந்து வெளிவந்த புகையைப் பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் புகைவந்த கடைகளைத் திறந்து பார்த்தபோது, உள்ளே வைக்கப்பட்டிருந்த அனைத்து மரப் பொருள்கள் மற்றும் மின் சாதனப் பொருட்களும் எரிந்து சாம்பலானது தெரியவந்தது. தொடர்ச்சியாக, இந்த தீ அடுத்தடுத்து இரண்டு கடைகளுக்குப் பரவியது. இதனால், 3 கடைகளிலும் உள்ள மரச்சாமான்கள் மற்றும் மின்சாதனங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. பருப்பொருள்கள் (Materials) இருந்ததால், தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத் துறையினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றது.