தற்போது பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் அச்சுறுத்த ஆரம்பித்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து பொது மக்களை மீட்பதற்காகத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்த தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள் ஒதுக்கப்பட்டு பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை கொரோனா நோய்த் தொற்று சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு வரும்போது செயல்படுத்த வேண்டிய முதல் உதவிகள் குறித்த செயல்முறை விளக்கம் இன்று நடைபெற்றது.
இதில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை மையத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன் அவருக்கு பிபி போன்றவற்றை ஆய்வு செய்து உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் வாயு அளிப்பது மற்றும் அவரின் உடல்நிலை சீராக உள்ளதா? என்பதை ஆராய்வது உள்ளிட்ட செயல் முறையின் முதல் கட்ட பணிகள் நடைபெற்றது. இந்த செயல்முறை விளக்கப் பணிகளை அரசு மருத்துவமனை டீன் நேரு மருத்துவக் கண்காணிப்பாளர் அருண் ராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.