Skip to main content

காவிரி வாரியம் அமைப்பதில் துரோகம்: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவோம்! ராமதாஸ்

Published on 27/03/2018 | Edited on 27/03/2018
ramados


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களின் முதுகில் மீண்டும் ஒருமுறை குத்த மத்திய அரசு தயாராகி விட்டதாகவே தோன்றுகிறது. இது மன்னிக்க முடியாத துரோகமாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் கணக்கிட முடியாதவை. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்தது. 2014-ஆம் ஆண்டில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாவது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் விஷயத்தில் நேர்மையாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

அவற்றையெல்லாம் கடந்து 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி கடந்த மாதம் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், அதை செயல்படுத்துவது பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்று வரை ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அவரது அமைச்சரவை சகாக்களும், அதிகாரிகளும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிட்டு மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்கிறார்களே தவிர, மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவிரி ஆற்றை கர்நாடகம் நம்பியிருப்பதை விட தமிழகம் தான் கூடுதலாக நம்பியிருக்கிறது. தமிழகத்தில் பாசனத்திற்காக 19 மாவட்டங்களைச் சேர்ந்த 20 லட்சம் விவசாயக் குடும்பங்களும், குடிநீர்த் தேவைக்காக சென்னை, மதுரை உள்ளிட்ட 7 மாநகராட்சிகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி பேரும் காவிரியை நம்பியுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததன் மூலம் இவர்கள் அனைவரின் வயிற்றிலும் மத்திய அரசு அடித்திருக்கிறது. காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் கடந்த 2016-17 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்தார்கள்.

அதேபோன்ற நிலைமை தொடர வேண்டும் என்று தான் மத்திய அரசு விரும்புகிறது போலிருக்கிறது. ஒரு தேர்தல் வெற்றிக்காக ஒரு மாநிலத்தின் மக்களும், விவசாயிகளும் இறந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு மத்திய ஆட்சியாளர்களின் மனம் கல்லாக மாறியிருக்கிறது. அவர்களின் துரோகத்திற்கு தமிழகத்தை ஆளும் அடிமை பினாமிகளும் துணை போய்க்கொண்டிருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு செய்த துரோகத்தைக் கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் முதல்கட்டமாக வரும் 30-ஆம் தேதி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். இது அரசியலுக்காகவோ, அரசியல் கட்சியின் சார்பிலோ நடத்தப்படும் போராட்டம் அல்ல. மாறாக உழவர்களுக்காக மக்களால் நடத்தப்படும் போராட்டம் ஆகும். அரசியல் சார்பற்ற இப்போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அதைத் தொடர்ந்து வரும் 30-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்கங்களின் கூட்டத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. உழவர் அமைப்புகள் அறிவிக்கும் போராட்டத்திற்கு பா.ம.க முழு ஆதரவு அளிப்பதுடன், அந்த போராட்டங்களிலும் பங்கேற்கும். மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை பல வழிகளில் பா.ம.க. தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்