புதிதாகத் திறக்கப்பட உள்ள கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நிலையைப் பற்றி இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில் அவர் பேசியதாவது, “புதிதாக அமைக்கப்பட்ட இந்த கிளம்பாக்கம் பேருந்து நிலையம் சுமார் 400 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கிளம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கப்படும் பொழுது, அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், மழை காலங்களில் அந்த சாலைகளில் தேங்கிய தண்ணீர் பிரச்சனை, அங்கு வரும் பயனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் என இதைப் பற்றி திட்டமிடப்படாமல் இந்த பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்னகர வளர்ச்சி குழுமத்தின் பொறுப்பை எனக்கு அளித்த பின் பேருந்து நிலையத்திற்காக கிட்டதட்ட 8 முறை கள ஆய்வு மேற்கொண்டு வந்தோம். மேலும் 10க்கும் மேற்பட்ட கலந்தாய்வு கூட்டம் நடத்தியிருக்கிறோம். இந்த கலந்தாய்வின் பலனாக பேருந்து நிலையம் திறக்கப்படும் போது ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த கிளம்பாக்கத்திருக்கும் அயனஞ்சேரிக்கும் இணைக்கும் விதமாக சுமார் 1.20 கி.மீ அளவிற்கு புதிதாக சாலைகள் அமைக்கப்பட இருக்கிறது.
அதே போல் போலீஸ் அகாடமி சாலையில் சுமார் 6 கி.மீ அளவிற்கு சாலை அமைக்கப்பட திட்டமிட்டுள்ளோம். அதில் 2 கி.மீ அளவில் உள்ள இடம் வனத்துறை வசமாக உள்ளதால் அவர்களிடம் முன்னனுமதி கேட்டு அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றோம். அதே போல் வண்டலூர் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த கிளம்பாக்கத்திற்கு மாற்று பாதையாக 6 கி.மீ அளவிற்கு சாலை அமைக்கப்பட திட்டமிட்டுள்ளோம். மேலும் இந்த மாத இறுதிக்குள் சுமார் 13 கோடி பொருட்செலவில் மழைநீர் கால்வாய் அமைக்கின்ற பணி கூடிய விரைவில் துவங்கப்பட இருக்கிறது. கிளம்பாக்கத்தில் 15 கோடி செலவில் பூங்கா அமைக்கப்பட்டு அதற்கான பணியில் இருக்கின்ற இந்த நிலையில் 6 கோடி செலவில் மேலும் ஒரு பூங்கா அமைக்கப்பட்டு அந்த பணியும் துவங்கப்பட இருக்கின்றன.
மேலும், கிளம்பாக்கத்தில் புதிதாக காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கான கட்டுமான பணிகளும் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. மேலும் அங்கு வரும் பயணிகளுக்கு அவசர முதலுதவி தரும் விதமாக அங்கு மருத்துவ மையமும் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கிளம்பாக்கத்திற்கு வரும் பயனாளிகளுக்கு எந்த விதத்திலும் அசௌகரியம் ஏற்படக்கூடாது என பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். மேலும் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு தனியாக ஒரு இடத்தை தேர்வு செய்து கள ஆய்வு செய்து சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் 30 கோடி பொருட்செலவில் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
கிளம்பாக்கம் பேருந்து நிலையம் ஒட்டி பல்வேறு திட்டங்களை சுமார் 70 கோடி செலவில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பயனாளிகளுக்கு எல்லா விதத்திலும் பயன் அளிக்கும் விதமாக இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அதற்கான பணியில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.