கோவை மாவட்டம் துடியலூர் அருகே வெள்ளக்கிணறு என்ற பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் ஆணின் இடது கை ஒன்று கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவை, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள விஎஸ்.கே நகர் பகுதியில் கடந்த 15 ஆம் தேதி காலை வாகனத்தின் மூலம் தூய்மைப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்கள் குப்பையில் மனிதனின் கை மட்டும் கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அந்த நபரின் மற்ற உடல் பாகங்கள் இதேபோல் அருகில் உள்ள குப்பைமேடுகளில் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குப்பை தொட்டியில் ஆணின் இடது கை கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கை ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த பிரபு என்பவரின் கை என்பது விசாரணையில் தெரியவந்தது.
கோவை சரவணம்பட்டியில் தங்கி அழகுநிலையத்தில் பணியாற்றிவந்த பிரபு கடந்த 14 ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது மனைவி புகாரளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து குப்பையிலிருந்த கை காணாமல் போன பிரபுவின் கை என்பதை உறுதி செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்ததால் பெண்களுடன் முறையற்ற தொடர்பு ஏற்பட்டு இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் சந்தேகித்ததுபோலவே அதே அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த கவிதா என்பவரும் பிரபுவிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டு அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்பொழுது எடுத்த வீடியோ காட்சிகளை வைத்து பிரபு கவிதாவை மிரட்ட தொடங்கிய நிலையில், கவிதா இதுகுறித்து தனது மற்ற நண்பர்களான திவாகர், கார்த்திக் ஆகியோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து மூவரும் கொலைத்திட்டம் தீட்டியுள்ளனர். பிரபுவை வீட்டிற்கு வரவைத்து மூவரும் சேர்ந்து கொலை செய்து உடலை மரம் வெட்டும் இயந்திரத்தின் மூலம் 12 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் கவரில் போட்டு பல்வேறு இடங்களில் வீசினோம் என மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உடனடியாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிக்கு மேற்குமண்டல காவல்துறை தலைவர் சுதாகர் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், மேலும் இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்ட 40 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.